'கடவுள் அணு’வும் சிவனின் நடனமும்! – எஸ்.குருமூர்த்தி

‘கடவுள் அணு’ என்று விஞ்ஞானிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட, எல்லா அணுக்களிலும் நுண்ணியதும், ஆதாரமானதுமான நுண்மையான அணுவை, சுமார் 14 ஆண்டுகள் முயற்சி செய்து, ஏறக்குறைய ரூ.20,000 கோடி செலவு செய்து, ஸ்விட்சர்லாந்து – பிரான்ஸ் நாட்டு எல்லையில் உருவாக்கப்பட்ட ‘செர்ன்’ என்கிற விஞ்ஞான ஆராய்ச்சி சாலை, அடையாளம் கண்டு விட்டதாக ஜூலை 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டபோது உலகமே வியந்தது. இந்த ‘கடவுள் அணு’ என்று அழைக்கப்படும் துண்டு அணுவுக்கு உண்மையான பெயர் ‘ஹிக்ஸ்-போசான்’ என்பது. இது இரண்டு விஞ்ஞானிகளுடைய பெயர்களின் இணைப்பு. இதில் ஹிக்ஸ் என்பது இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியின் பெயர். இவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்.


1998-ல் துவங்கிய இந்த விஞ்ஞான முயற்சி எல்லாவற்றுக்கும், 74 ஆண்டுகளுக்கு முன், 1924-ஆம் ஆண்டு பிள்ளையார் சுழி இட்டவர், நம் நாட்டு விஞ்ஞானியான கல்கத்தாவைச் சேர்ந்த சத்யேந்திரநாத் போஸ் என்கிற இளைஞர். 1894-ல் பிறந்த இவர், 1924-ஆம் ஆண்டு அணுவையும் அணுசக்தியையும் கண்டுபிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு, ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை அனுப்பினார். அப்போது அவருக்கு 30 வயது. அவரும் ஐன்ஸ்டீனும் சேர்ந்து செய்த ‘ஐன்ஸ்டீன் - போஸ் கண்டேன்செட்’ என்கிற கண்டுபிடிப்புதான், செர்ன் விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கும் நுண் அணுவைத் தேடுவதன் துவக்கம். அணுக்களுக்கு உப அணுக்கள் உண்டு என்பதற்கு போஸின் சிந்தனைதான் துவக்கமாக இருந்தது.

அவருடைய பெயரில் ஒரு அங்கமான ‘போஸ்’தான் ஹிக்ஸ்-போசான்’ என்கிற இரட்டைப் பெயரில் இரண்டாவது அங்கமாக இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வுதான் இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் பிரம்மாண்டமான முயற்சியாக மாறி, ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. செர்ன் அமைப்பின் விஞ்ஞானிகள் கூறியிருப்பது இதுதான்: ‘இதுவரை ஹிக்ஸ்-போசான் என்கிற நுண்ணணு இருக்கிறது என்று நினைத்தது சரி என்று தோன்றுகிறது. நாங்கள் கண்டுபிடித்திருப்பது 99.999 சதவிகிதம் அதுதான். இந்த அணுதான் பிரபஞ்சத்தில் இருக்கும் தோற்றம், பரிமாணம், உருவமைப்பு சம்பந்தப்பட்ட எல்லா ரகசியத்திற்கும், கேள்விகளுக்கும் விடையாக இருக்கும். இதன் மூலம் தெளிவு கிடைக்கிற வாய்ப்பு இருப்பதால், இந்த அணுவை ‘கடவுள் அணு’ என்று ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூற, எல்லோரும் அப்படியே இந்த அணுவை அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘ஹிக்ஸ்-போசான்’ அணுவுக்கும், பாரத நாட்டுக்கும் தொடர்புண்டு. இதை சத்யேந்திரநாத் போஸ் மட்டுமல்ல, செர்ன் விஞ்ஞானிகளின் அமைப்பின் அதிகாரபூர்வ அறிவிப்பாளரான பாவ்லோ குபிலினோ, இந்தக் கண்டுபிடிப்பு வெளிவருவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே, அக்டோபர் 2011-ல், ‘பாரத நாடுதான் இந்தக் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்குத் தாய்’ என்று பட்டவர்த்தனமாகக் கூறினார். எங்கோ ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் செய்யும் இந்த முயற்சிக்கு, எப்படி பாரதம்தான் தாய் என்று அவர் கூறினார்?

பாரத நாட்டுக்கும், இந்த கடவுள் அணு என்று நம்பப்படும் ‘ஹிக்ஸ்-போசான்’ அணுவுக்கும் வேறு என்ன தொடர்பு? அந்தத் தொடர்பை அறிய வேண்டுமென்றால், 2004-ஆம் ஆண்டு செர்ன் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த ஓர் அதிசயமான நிகழ்ச்சி பற்றித் தெரிய வேண்டும்.

2004 ஜூன் 18 அன்று செர்ன் ஆய்வுக் கூடத்தின் அரங்கத்தில், 6 அடி உயரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலை நிர்மாணம் செய்யப்படுகிறது. சரி, செர்ன் ஆராய்ச்சி சாலையில் நடனம் ஆடும் சிவனுக்கும் – அதாவது, நடராஜருக்கும், செர்ன் அமைப்பில் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்கும் என்ன சம்பந்தம்? யாரோ ஒரு சிவ பக்தர் இதைச் செய்தார் என்று நினைக்க வேண்டாம். நமது மதச் சார்பற்ற அரசாங்கம்தான் இந்தச் சிலையை அனுப்பி, அங்கு அமைத்தது. அழகாக இருக்கிறது என்பதற்காக நடனமாடும் நடராஜரின் சிலை அங்கு அனுப்பப்படவில்லை. அப்படி, ஒரு மதம் சம்பந்தப்பட்ட ஒரு தெய்வத்தின் சிலையை அமைக்க விஞ்ஞானிகள் அனுமதிக்கவும் மாட்டார்கள்.

ஏன், நம் சமயச் சார்பற்ற அரசாங்கம், செர்ன் விஞ்ஞான கூடத்தில் ஹிந்துக்கள் வணங்கும் நடராஜர் சிலையை அமைத்தது? அந்த விஞ்ஞானிகளின் அமைப்பு அதை ஏன் அனுமதித்தது? 1972-ஆம் ஆண்டு, ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க பௌதிக விஞ்ஞானி 'The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics' (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற தலைப்பில் Main currents in Modern Thought என்கிற விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின் நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.

1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை ’The Tao of Physics' என்கிற தலைப்பில் ஒரு பெரிய புஸ்தகமாக அவர் எழுதினார். அது உலகிலேயே அதிகம் விற்ற புஸ்தங்களில் ஒன்றாகப் பிரபலமாகியது.

செர்ன் ஆய்வு கூடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிவனின் சிலையின் பீடத்திற்கு அருகிலுள்ள ஒரு பலகையில், ப்ரிட்ஜாப் காப்ரா தன்னுடைய ’The Tao of Physics'புஸ்தகத்தில் எழுதிய சில வரிகள் இது:

“ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்தியக் கலைஞர்கள், உலோகங்களில் நடராஜரின் நடனத்தை அழகாகச் சித்திரித்தனர். நம் நவீன காலத்தில் பௌதிக விஞ்ஞானிகள், மிகவும் நுண்ணிய தொழில் நுட்பத்தின் மூலமாக இசைவுடன் கூடிய பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடன வகைகளைச் சித்திரிக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடனம், நவீன பௌதிகத்தையும், ஹிந்து சமயக் கலைகளையும், பண்டைய புராணங்களையும் இணைக்கிறது... நவீன விஞ்ஞானம், சீராக இணைந்து செயல்படும் படைப்பு மற்றும் அழிப்பு இரண்டும் (தோன்றி மாறும் பருவ காலங்கள், பிறந்து இறக்கும் ஜீவராசிகள் மட்டுமல்லாமல்) உயிரில்லாத வஸ்துகளுக்கும் பொருந்தும். உயிரில்லாத ஜட வஸ்துகளும் தோன்றி மறைகின்றன என்று நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. ஆகவே, நவீன பௌதிக விஞ்ஞானிகளுக்கு சிவனுடைய நடனமே உப அணுக்களின் நடனம்”.


காப்ராவுக்கு பசிபிக் கடல் கரையில் ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாகத்தான் அவர் நடராஜரின் நடனத்துக்கும், அணு விஞ்ஞானத்துக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்ந்தார். கடலைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு கடல் அலைகள், சூரிய கிரணங்களின் அலைகள், சிந்தனை அலைகள் எல்லாமே ஒரே சீரான (அணு விஞ்ஞான) நடனத்தின் பிரதிபலிப்பாகப் பட்டது. ‘எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியேதான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது’ என்று கூறினார் காப்ரா.

பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic dance). அதுவே தான் நடராஜரின் நடனம் என்கிறார் காப்ரா. கோடானுகோடி அணுக்களை ஆட்டிப் படைக்கும் அவற்றுக்கு ஆதாரமாக இருக்கும் உப அணுவைத்தான், இப்போது கண்டுபிடித்துள்ளதாக செர்ன் அமைப்பின் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ‘நடராஜரின் பிரபஞ்ச நடனமும், அணுக்களின் நடனமும் ஒன்றே’ என்று கூறும் அளவுக்கு, விஞ்ஞானமும் ஹிந்து ஆன்மிகமும் நெருங்கி விட்டிருக்கிறது. அதனால்தான் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் ஆய்வு கூடத்தில், தில்லை நடராஜர் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.

ஹிந்து ஆன்மிகமும் விஞ்ஞானமும், அணு விஞ்ஞானத்தின் அடிப்படையில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை, காஞ்சி மஹா ஸ்வாமிகள், ‘தெய்வத்தின் குரல்’ நூலில் விளக்குகிறார். இந்த விளக்கத்தை அவர் 1960-களில் கொடுத்திருக்க வேண்டும். அணு விஞ்ஞானம், அதுவரை ஜடமாக இருந்த விஞ்ஞானத்தை ஆன்மிகத்துடன் எப்படி இணைத்தது என்பதை, அவர் இப்படி விளக்குகிறார்:

“காண்கிற உலகம் பலவிதமாக இருந்தாலும், ஒன்றேதான் இத்தனையும் ஆகி இருக்கிறது என்பதை நவீன சையன்ஸ் தெளிவாக ஒப்புக் கொண்டு நிலைநாட்டுகிறது. 50 வருஷங்களுக்கு முன், உலக வஸ்துக்கள் எல்லாம் 72 மூலப் பொருள்களுக்குள் அடங்குவதாக சையன்ஸ் சொல்லி வந்தது. இந்த (ஜட) மூலப் பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை (அதாவது ஒன்றுடன் ஒன்று சேராதது) என்பதே அன்றைய கருத்து. ஆனால், இப்போது அணு (atom) பற்றிய அறிவு விருத்தியான பின், இந்த மூலப் பொருட்கள் எல்லாமும் கூட வேறான பொருள்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (energy)தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் சையன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியுள்ளார்கள். பொருள் (matter), சக்தி (energy) – இவையும் வேறானவை அல்ல என்று சையன்ஸ் சொல்கிறது.

“ஐன்ஸ்டீன், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல சயன்ஸ் நிபுணர்கள், அத்வைத சித்தாந்தத்திற்கு மிகவும் நெருங்கி வந்து விட்டார்கள். பிரம்மம்தான் பரமார்த்திக சத்தியம். உலகம் விவகார (நடைமுறை) சத்தியம் என்று அத்வைதம் சொல்வதைத்தான், இவர்கள் (விஞ்ஞானிகள்) ‘உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (relative) தான்; முழு உண்மை (absolute) அல்ல’ என்கிறார்கள்”. (இப்படி உலகம் ‘ஏதோ ஒன்றைச் சார்ந்தது’ என்கிற விஞ்ஞான தத்துவம்தான் ஐன்ஸ்டீனின்relativity theory!

ஆனால் விளைவுகளை வைத்துப் பார்த்தால், விஞ்ஞானத்துக்கும் அத்வைதத்துக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அது என்ன? மகா ஸ்வாமிகள், ‘சக்தியும் பொருளும் ஒன்று என்கிற பெரிய உண்மையைக் கண்ட அணு விஞ்ஞானிகள், அந்த அறிவைக் கொண்டே அணுகுண்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதுதான் துக்கமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து சையன்ஸால் நிலைநாட்டப்படும் அத்வைத தத்துவம், புத்திமட்டத்தோடு நின்றதன் அனர்த்தம் இது. சையன்ஸின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடும் மட்டும் நிற்காமல், வெளி உலகத்துக்குக் காரணமான உள் உலக உண்மையை ஆராய்ந்து, புத்தியோடு நிற்காமல் மக்களுடைய பாவனையிலும் தோய வேண்டும். ஜீவ குலம் எல்லாம் ஒன்றுதான் என்ற ஞானமும் சையன்ஸ் வழியாக ஏற்பட்டால், அணு குண்டைத் தயாரித்த சையன்ஸே ஆத்மஹானிக்குப் பதிலாக, மகத்தான ஆத்மக்ஷேமம் செய்ததாகவும் ஏற்படும்” என்கிறார்கள்.

‘கடவுள் அணு’ கண்டுபிடிப்பு, ஜீவ குலம் எல்லாம் ஒன்று என்கிற ஆன்மிக உண்மையைப் பரப்புமா? அல்லது அணுகுண்டைப் போல் பல மடங்கு நாசத்தை விளைவிக்கும் அனர்த்தத்தைச் செய்யுமா என்பது எதிர்காலத்தில்தான் விளங்கும்.

 
இவ்வளவு சூட்சுமமான உண்மையைத் தேட முதலில் வழி கோலிய சத்யேந்திரநாத் போஸுக்கு நம்முடைய அரசாங்கம் என்ன செய்தது? அவர் 1974 வரை வாழ்ந்தார். அவர் தன்னுடைய 80-ஆவது வயதில் இறந்தபோது, அவர் யார் என்று கூட நம் நாட்டில் யாருக்கும் தெரியாது. உப அணுக்கள் பற்றி அவருக்குக் கிடைக்க வேண்டிய நோபல் பரிசு, என்ரிகோ பெர்மி என்கிற இத்தாலிய நாட்டுக்காரருக்கு கிடைத்தது. 1954-ஆம் ஆண்டு போனால் போகிறது என்று அரசியல்வாதிகளிலிருந்து வணிகர்கள், நடிகர்கள், நடிகைகள் வரை எல்லோருக்கும் அளிக்கும் பத்மபூஷண் விருதை அவருக்கு அளித்தது அரசு.

அணு என்றால் என்ன?

அணு என்பதை கண்ணால் காண முடியாது, தொட்டு உணர முடியாது, நுகரவும் முடியாது. அப்படிப் பார்க்க முடியாத, உணர முடியாத, நுகர முடியாத அணுக்களால்தான், நம்முடைய உடல், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, குடிக்கும் நீர், நம்மைத் தாங்கும் நிலம், நாம் பார்க்கும் மரம், செடி, கொடி மற்றும் ஜடப் பொருள்கள் எல்லாமாக உருவாகியிருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் அணு. விஞ்ஞானப்படியும் நம்முடைய மெய்ஞானப்படியும் உண்மை. அந்த அணுக்களுக்குள் உப அணுக்கள் மறைந்திருக்கின்றன. அந்த அணுக்களை நிர்வகிக்கும் ‘கடவுள் அணு’ என்ற ஒன்று இருக்கிறது என்றால், எந்த அளவுக்கு சூட்சுமமானது அந்த அணு!

- நன்றி துக்ளக்

Comments

Post a Comment

Popular posts from this blog

மறத்தமிழன் சிறப்பு